||Shri Ganeshaya Nama||
பகுப்பு ராசிகள்/பகுப்பு செயல் திட்டம்/வர்க்கச் சக்கரங்கள்
பகுப்பு ராசிகள்/பகுப்பு செயல் திட்டம்/வர்க்கச் சக்கரங்கள்
(Phala Kundali or Divisional Chart)
Phala என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் effect
என்று பொருள்.தமிழில் அது செயல்படுத்தும் விதம் என்று
பொருள்படுகிறது. இங்கே Division என்ற சொல்லுக்கு பகுப்பு, பிரிவு என்பது பொருளாகும். ஆதலால் ராசிக்கட்டத்தை பல பகுப்புகளாக
பிரித்து அவைகள் கொடுக்கும் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்வதை பகுப்பு செயல் திட்டம் என்று சொன்னால்
மிகையாகாது.
சமஸ்கிருத மொழியில் ராசி என்ற சொல்லுக்கு
பலவகை குவியல் என்று பொருள். ஆகையால் ராசி அல்லது ஜாதகக் கட்டம் அல்லது ஜாதகக்
கட்டங்களில் ஒன்று என்று சொன்னால் அதற்கு பெரும் எண்ணிக்கையுள்ள , ஏராளமான, பலவிதமான மூலப்பொருட்கள் அல்லது
அடிப்படைக் கொள்கைகள் என்று அர்த்தம். ஆகையால் ஒரு ராசியில் அடங்கியுள்ள பல்வேறு
விஷயங்கள் ஒரே சமயத்தில் நல்லவிதமான பலன்களையோ, கெட்டவிதமான
பலன்களையோ, அல்லது கலவையான பலன்களையோ ஒரு மனிதனின் வாழ்வில்
நடத்திவிடும் என்று நம்ப முடியாது என்பது பொதுவான கருத்தாகும். சிலது நல்ல பலன்களாகும், சிலது கெட்டப்பலன் களாகும், சிலது இரண்டும்
கலந்ததாகும். அது தவிர ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் நல்ல விஷயங்கள் வெவ்வேறு
காலகட்டங்களில் மாறுபட்டதாகவும் இருக்கலாம். ஆக இவைகளை நிரணயிப்பது காலமே ஆகும்.
மாறுபட்ட பலன்களை கொடுப்பது மட்டுமல்லாது அவைகளுக்கு காலமே காரணியாக இருக்க
வேண்டும்.
உதாரணமாக ஜாதகத்தில் நான்காம் பாவத்தை
எடுத்துக் கொண்டால், உயர்கல்வி, மகிழ்ச்சி, தாயார்,
சொத்துக்கள் என பல அம்சங்கள் உண்டு. உயர்கல்வியாளன் மகிழ்ச்சியை விரும்பக்கூடும்.
ஒரு பணக்காரன் நல்ல கல்வியறிவு இல்லாதவனாக இருக்கலாம். ஒரு தாயார் தன் மகனைப்
பற்றி மிகுந்த உவகை கொண்டிருக்கலாம்.அதே சமயத்தில் மகனுக்கு தாயார் பேரில்
பற்றில்லாமலும் போகலாம். இதைப் போல பல விஷயங்களை நான்காம் பாவத்தைக் கொண்டு
பேசலாம்.
மேலும் நான்காம் வீட்டிற்குரிய அம்சங்களை ஆராயும்
போது அவற்றில் உள்ள காரகத்துவம்,வயது, அமர்ந்திருக்கும் கிரகங்கள், அவைகளை பார்க்கும் கிரகங்கள், தசா புத்திகள், அது சம்பந்தமாக உள்ள மற்ற விஷயங்கள் ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டே பலன்களை
கூற வேண்டும்.
மத்திம வயதில் ஒருவரின் ஜாதகக் கட்டத்தில் நான்காம்
வீட்டைப் பற்றி ஆராயும் போது அவரது சொத்து, வீடு, வாகனம்
ஆகியவற்றைப் பற்றியோ அல்லது அவற்றை ஒட்டிய விஷயங்களைப் பற்றியோ தான் கேள்விகள் இருக்கும்.
அவரது தாயாரைப் பற்றியும் இருக்கலாம். ஆனால் கல்வி சம்பந்தம் அதில் இருக்குமா என்பது
கேள்விக்குறியே. இதைப்போல யுவ வயதில் உள்ள ஒருவரின் கேள்வி கல்வியை முக்கியமான மையமாக
வைத்துத் தான் இருக்கும். முதிய வயதில் உள்ளவரின் மாநாடு மகிழ்ச்சிகளைப் பற்றியும்
சில வேளைகளில் சொத்துக்களைப் பற்றியும் இருக்கலாம். ஆக ஒருவரின் வயதையும் மனதில் கொண்டே
பலன் களை ஆராய வேண்டும்.
இது தவிர ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும்
மகிழ்ச்சி , சில காலகட்டத்தில் அதுவே படிப்படியாக சுருங்கி
துன்பத்திற்கும் வறுமைக் கோட்டிற்கும் இழுத்துச் செல்லலாம். பாவங்கள், காரகத்துவங்கள் ஆகியவைகள் குறிப்பிடும் பலன்களை புத்தகங்கள் கொடுத்திருந்தாலும்
அனுபவத்தில் அவை சரியானவையா என்பதை நாம் தான் ஆராய வேண்டும். ஒரு உயர்தரமான ஜாதகத்தையோ
அல்லது தாழ்ந்த நிலையில் உள்ள ஜாதகத்தையோ கணிப்பது மிகப் பெரிய விஷயமல்ல. காரணம், உயர்தர ஜாதகம் நல்ல பலன்களை மட்டுமே கொடுக்கும். அதே சமயம் பலவீனமாக உள்ள
ஒரு ஜாதகம் தாழ்வான, பாதகமான பலன்களையே கொடுக்கும். அதைப்போலவே
புகழ் வாய்ந்த ஜோதிடர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அன்பர்கள் உயர்பதவிகளில் உள்ளவர்களின்
ஜாதகங்களையே ஆராயும்படி அமையலாம். இதற்கு அவரவர்களின் அதிர்ஷ்டமே காரணமின்றி வேறொன்றும்
இல்லை. அந்த காலகட்டங்களில் அவர்களுக்கு லாபகரமான தசா புத்திகள் அமைந்திருக்கும்.
அதைப்போலவே நல்ல ஜோதிட அறிவை பெற்றிருந்தும் அவரின் பாதக நிலையில் உள்ள கிரகங்களின் தசா புத்திகள் நடைபெறும்
போது ஜோதிடரை மத்திய வர்க்க மக்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களே அணுகுவர்.
அதனால் பலனை தெளிவாகச் சொன்னாலும் அவர்கள் பிரபலமாக வாய்ப்பில்லை என்பதற்கு அவரின்
பாதகமான கிரகங்களே அன்றி அவருக்கு சிறந்த ஜோதிட அறிவு இல்லையென்று பொருள் அல்ல.
இது தவிர பெரும்பாலான ஜோதிடர்கள் வெறும் ராசிக்
கட்டத்தை மட்டுமே ஆதரமாகக் கொண்டு பலன் சொல்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே நவம்ஸம் தேவை
என்கிறார்கள். மற்ற அம்சங்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஆனால் கணித முறையில் ராசிக்
கட்டத்தை மட்டும் வைத்து பலன் சொல்வதை விடுத்து பகுப்பு ராசி முறையில் கணித்து பலன்
சொல்லும் முறையை பயன்படுத்தினால் எல்லா காலகட்டத்திலும் , எல்லா தரப்பினருக்கும் ஏற்ற வகையில் பலன் சொல்ல இயலும்.
இந்த பகுப்பு ராசிகள்/பகுப்பு செயல்படுத்தும்
விதம் பற்றி எங்களின் மதிப்பிற்குரிய, மரியாதைக்குரிய ஆசான் பெங்களூரு
H.R.சேஷாத்ரி ஐயர் அவரது Divisional
chart method ,இல் துல்லியமான பலன்களை கணிக்கும் விதம் பற்றி
தெளிவாக எடுத்துரைத்துள்ளார். அவரின் அருளாசியையும், அவரின் சொல்லி
விளக்கும் தன்மையையும் புரிந்து பலன்களை சொன்னால் அது துல்லியமாக அமையும்.
இது புதிய கண்டுபிடிப்பல்ல என்று அவரே சொல்லியிருக்கிறார்.
வேதத்தை ஒட்டிய எந்த விஷயமும் புதிய கண்டுபிடிப்பில்லை. இந்த கணித முறை புதியதும் அல்ல.
இந்த முறையானது விலை மதிப்பற்றது என்று சொன்னால் மிகையாகாது. பகுப்பு ராசிகள் கண்டுபிடிக்கும்
முறை முன்பே இருந்திருக்கிறது என்றாலும் அதை கையாளும் முறை எங்களின் குருநாதரையே சேரும்.
உச்சம் பெற்ற கிரக அமைப்பு, கஜகேசரி யோகம் மற்றும் பல புகழ் பெற்ற யோகங்கள் உள்ள ஜாதகங்கள் கூட நல்ல பலன்களை
தருவதில்லை என்பது அனுபவ பூர்வமான உண்மை. இவைகள் எல்லாம் ராசிக் கட்டத்தை மட்டும் வைத்து
பலன் சொல்லும் எல்லா ஜோதிடர்களுக்கும் பொருந்தும்.ஆனால் பகுப்பு ராசிக் கட்டங்களைப்
பார்த்து பலன்களை அறியும் போது நம் ஜோதிட முன்னோர்களாகிய பராசரர், வராகமிகிரர் போன்ற ரிஷிகளின் ஞானத்துவம் நமக்குப் புரியும்.அவர்கள் நமக்கு
அளித்துள்ள உண்மையான நற்செய்தி என்னவெனில் பகுப்பு ராசிக் கடன்களை அலசி ஆராய்ந்து கணிக்கும்
முறையே ஆகும்.
பகுப்பு ராசி முறை எளியது,அறிவுப் பூர்வமானது, துல்லியமான கணித முறை என்று பாராட்டப்பட்ட
கணித முறை என்பது தான் அனுபவம்.
No comments:
Post a Comment