Saturday, October 28, 2017



சந்திராஷ்டமம் குறித்த அனுபவ விளக்கம்


ஜென்ம ராசிக்கு எட்டாம் ராசியில் கோட்சாரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் இரண்டேகால் நாட்களை சந்திராஷ்டமம் என்கிறோம். இந்த நாட்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கிய பணிகள் தவிர்த்து மற்ற பணிகளில் ஈடுபாடு கூடாது. திடீர் பயணங்கள் செய்யக்கூடாது.குறிப்பாக பேச்சில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் அனுபவத்தில் எல்லோருக்கும் ஒரே மாதிரி விளைவுகள் சந்திராஷ்டமத்தினால் ஏற்படுவதில்லை. ஜென்ம ராசிக்கு எட்டாம் ராசியில் இருக்கும் பிறந்த நட்சத்திரத்திலிருந்து எண்ண வரும் 16,17 மற்றும் 18வது நட்சத்திரங்கள் இந்த சந்திராஷ்டம காலத்தில் அடங்கும். தாரா பலன் அடிப்படையில் இந்த 16வது நட்சத்திரம் வதைத் தாரையிலும், 17வது நட்சத்திரம் மைத்திரம் 18வது நட்சத்திரம் பரம மைத்திரம் என்கிற வகையிலும் விழுகின்றன. இதில் வதை என்பது துன்பத்தையும் மைத்திரம் என்பவை நட்பையும் குறிக்கும். எட்டாம் ராசியில் விழும் இந்த 16வது வதை நட்சத்திரம் சிலருக்கு கால் பாகமும், சிலருக்கு அரை, சிலருக்கு முக்கால் மற்றும் சிலருக்கு முழு நட்சத்திரமாக அமையும். ஒரு நட்சத்திரத்தின் அளவு தோராயமாக 24 மணி நேரம் என்று எடுத்துக் கொண்டால், அதில் சிலருக்கு 6 மணி நேரம், சிலருக்கு சிலருக்கு அரைநாள், சிலருக்கு முக்கால் நாள் மற்றும் சிலருக்கு முழு நாள் இருக்கும். இங்கே நாள் என்று சொல்லப்படுவது குறிப்பிட்ட 16வது நட்சத்திரத்தின் ஆரம்ப நேரம் முதல் முடியும் நேரம் வரை. இந்த சந்திராஷ்டமம் என்பது இந்த 16வது நட்சத்திரம் 8ஆம் ராசியிலிருக்கும் காலம் வரை, சிற்சில தடைகள், அதன் மூலம் சிறு மன உளைச்சல், செய்யும் வேளைகளில் சிறிது தாமதம் ஆகியவை மட்டுமே ஏற்படும். மற்ற இரண்டு நட்சத்திரங்கள் சுப தாரையில் வருவதால் மற்றபடி வேறு எந்த பிரச்சினைகளும் ஏற்படுவதில்லை. திடீர் பிரயாணங்களை மட்டும் தவிர்த்தால் போதுமானது. ஆனால் எல்லோருக்கும் இப்படியல்ல. யாருக்கெல்லாம் ஜாதகத்தில் சந்திரன் நீசமாகவும், பகை வீடுகளிலும், ஆட்சி உச்சம் தவிர்த்த மறைவு ஸ்தானங்களிலும் இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டும் சற்று கூடுதலான அலைச்சல்கள், மன உளைச்சல்கள் உண்டாகும். குறிப்பாக பேச்சினால் வம்பு வரலாம். இவை அனைத்தும் அந்த குறிப்பிட்ட கால அளவுகளில் மட்டுமே ஏற்படும்.
இன்று காலை ஒரு முக்கிய பணிக்காக செல்ல வேண்டி இருந்ததால், நேரமாக அலுவலகம் சென்றுவிட்டு அந்த பணிக்கு செல்லலாம் என்று திட்டமிட்டு கிளம்பினால், சற்று தூரத்தில் ஒரு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் காரணமாக சாலையில் தடை. திரும்பிப் போனால் ரொம்பவும் சுத்து.... எனவே சந்துகளில் நுழைந்து, அவை சிறியதாக இருந்ததால் ஏகப்பட்ட ட்ராஃபிக். டேக் டைவெர்ஷன் , டேக் டைவெர்ஷன் என சிறிய தடை. சிறிது கால தாமதம். இவற்றைத் தாண்டி சந்திராஷ்டமம் குறித்த எந்த வித அச்சமும் தேவையில்லை.
குறிப்பிட்ட அந்த பணி எந்த தொய்வும் இல்லாமல் நல்லபடியாக முடிந்தது. எனக்கு சந்திரன் நான்காம் வீட்டில் திக் பலம் பெற்றதும் ஓர் காரணம்.
எனவே சந்திராஷ்டமம் குறித்த தேவையற்ற அச்சத்தைப் போக்கவே இந்த அனுபவ பதிவு.

No comments:

மனைவியின் ராசியை கண்டறியும் சூட்சுமம். ஒருவர் தனக்கு வரப்போகும் மனைவியின் ராசியை எளிதாக அறிந்துகொள்ள ஜோதிடத்தில் பல சூட்சுமங்கள்...