மணவாழ்க்கை – ஓர் ஜோதிட அலசல்
2ஆம் பாவகம் வருமானம், பேச்சு ஆகியவற்றைக் குறிக்கும். 4ஆம் பாவகம் வீடு,வாகனம்,வசதியான வாழ்க்கை போன்றவற்றைக் குறிக்கும். 5ஆம் பாவகம் புத்திர சந்தானத்தைக் குறிக்கும். 7ஆம் பாவகம் வாழ்க்கைத்துணைபற்றிய விஷயங்களைக் குறிக்கும். 9ஆம் பாவகம், அதிர்ஷ்டம், தெய்வ அனுகூலம் மற்றும் குழந்தை பாக்கியத்தையும் குறிக்கும். 11ஆம் பாவகம் விருப்பங்கள் நிறைவேறுதலை குறிக்கும் மற்றும் இரண்டாம் திருமணத்தையும் குறிக்கும். 12ஆம் பாவகம் படுக்கையறை சந்தோஷம் மற்றும் நிம்மதியான உறக்கத்தைக் குறிக்கும்.
ஒரு நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்கு மேற்கூறிய அத்தனை அம்சங்களும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை ஆகும். வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் மேற்கண்ட விஷயங்களையும் ஆராய வேண்டும். இதில் 2ஆம் பாவகம் கெட்டிருந்தால் பொருத்தம் பார்ப்பதே வீண்.
அடுத்து செவ்வாய். ஒருவருக்கு செவ்வாய் 1,2,7,8 ஆகிய இடங்களில் இருந்தால் 2ஆம் பாவகத்தை அது எப்படியாவது கெடுக்கும். 1ஆம் இடமான லக்னத்தில் இருந்தால் ஜாதகரும், 7ஆம் இடத்தில் இருந்தால் வாழ்க்கைத் துணையும் அனுசரித்து செல்லும் குணம் இல்லாமல் இருப்பார்கள்.அதன் காரணமாக தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டு 2ஆம் பாவகம் கெடும். அதைப்போலவே 2ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தாலும் 8ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தால் 2ஆம் இடத்தை பார்ப்பதாலும் குத்தல் பேச்சு, குதர்க்கம் போன்றவற்றால் கணவன் மனைவி இடையே நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும்.
சம்பத்து மற்றும் பரம மைத்திரமான நட்சத்திரங்களில் தம்பதிகள் அமைவது மிகவும் சிறப்பாகும். அதாவது ஜென்ம நட்சத்திரத்திற்கு 2,12 ஆம் நட்சத்திரங்களாகவும் அவை ஒருவருக்கொருவர் திரிகோண ராசிகளிலும் (1,5,9) அமைவதாகும்.
2ஆம் அதிபதி மறைவு ஸ்தானங்களில் இருப்பது, நீசமாகி இருப்பது. அவயோகியின் சாரம் ஏறி இருப்பது. துர்ஸ்தானாதிபதிகள் 2மிடத்தில் இருப்பது போன்றவை 2ஆம் கெடுவதற்கு காரணமாக அமைகின்றன.
சூரியன் செவ்வாய் சேர்க்கை 1,2 ஆம் இடங்களில் இருக்கும் போது பெரும்பாலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையிலான தூரம் 41 பாகைகளுக்கு மிகுந்திருந்தாலும் குடும்ப வாழ்க்கைக்கு தோஷமே.
எனவே பொருத்தம் பார்ப்பதோடு மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் ஆராய்ந்து தான் மணமக்களை இணைக்கவேண்டும்...
நிறைவாக அனுபவ பூர்வமான ஒரு விஷயம் என்னவென்றால் இதில் பொருத்தம் பார்த்தாலும்,பார்க்காவிட்டாலும், காதல் திருமணமாக இருந்தாலும், நிச்கயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் யார் யாருடன் சேர வேண்டுமோ அந்த ஜாதகங்கள் தான் இணைகின்றன.
கர்மாவின் படிதான் வாழ்க்கை நகர்கிறது என்பது தான் நிதர்சனம்.
No comments:
Post a Comment