Tuesday, October 31, 2017

மணவாழ்க்கை – ஓர் ஜோதிட அலசல்



ஜாதகத்தில் திருமணம் நடப்பதற்கு பார்க்கவேண்டிய முக்கியமான பாவகங்கள் 2,4,5,7,9 மற்றும் 11,12 ஆகிய பாவகங்கள் ஆகும். இவற்றில்
2ஆம் பாவகம் வருமானம், பேச்சு ஆகியவற்றைக் குறிக்கும். 4ஆம் பாவகம் வீடு,வாகனம்,வசதியான வாழ்க்கை போன்றவற்றைக் குறிக்கும். 5ஆம் பாவகம் புத்திர சந்தானத்தைக் குறிக்கும். 7ஆம் பாவகம் வாழ்க்கைத்துணைபற்றிய விஷயங்களைக் குறிக்கும். 9ஆம் பாவகம், அதிர்ஷ்டம், தெய்வ அனுகூலம் மற்றும் குழந்தை பாக்கியத்தையும் குறிக்கும். 11ஆம் பாவகம் விருப்பங்கள் நிறைவேறுதலை குறிக்கும் மற்றும் இரண்டாம் திருமணத்தையும் குறிக்கும். 12ஆம் பாவகம் படுக்கையறை சந்தோஷம் மற்றும் நிம்மதியான உறக்கத்தைக் குறிக்கும்.
ஒரு நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்கு மேற்கூறிய அத்தனை அம்சங்களும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை ஆகும். வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் மேற்கண்ட விஷயங்களையும் ஆராய வேண்டும். இதில் 2ஆம் பாவகம் கெட்டிருந்தால் பொருத்தம் பார்ப்பதே வீண்.
அடுத்து செவ்வாய். ஒருவருக்கு செவ்வாய் 1,2,7,8 ஆகிய இடங்களில் இருந்தால் 2ஆம் பாவகத்தை அது எப்படியாவது கெடுக்கும். 1ஆம் இடமான லக்னத்தில் இருந்தால் ஜாதகரும், 7ஆம் இடத்தில் இருந்தால் வாழ்க்கைத் துணையும் அனுசரித்து செல்லும் குணம் இல்லாமல் இருப்பார்கள்.அதன் காரணமாக தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டு 2ஆம் பாவகம் கெடும். அதைப்போலவே 2ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தாலும் 8ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தால் 2ஆம் இடத்தை பார்ப்பதாலும் குத்தல் பேச்சு, குதர்க்கம் போன்றவற்றால் கணவன் மனைவி இடையே நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும்.
சம்பத்து மற்றும் பரம மைத்திரமான நட்சத்திரங்களில் தம்பதிகள் அமைவது மிகவும் சிறப்பாகும். அதாவது ஜென்ம நட்சத்திரத்திற்கு 2,12 ஆம் நட்சத்திரங்களாகவும் அவை ஒருவருக்கொருவர் திரிகோண ராசிகளிலும் (1,5,9) அமைவதாகும்.
2ஆம் அதிபதி மறைவு ஸ்தானங்களில் இருப்பது, நீசமாகி இருப்பது. அவயோகியின் சாரம் ஏறி இருப்பது. துர்ஸ்தானாதிபதிகள் 2மிடத்தில் இருப்பது போன்றவை 2ஆம் கெடுவதற்கு காரணமாக அமைகின்றன.
சூரியன் செவ்வாய் சேர்க்கை 1,2 ஆம் இடங்களில் இருக்கும் போது பெரும்பாலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையிலான தூரம் 41 பாகைகளுக்கு மிகுந்திருந்தாலும் குடும்ப வாழ்க்கைக்கு தோஷமே.
எனவே பொருத்தம் பார்ப்பதோடு மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் ஆராய்ந்து தான் மணமக்களை இணைக்கவேண்டும்...
நிறைவாக அனுபவ பூர்வமான ஒரு விஷயம் என்னவென்றால் இதில் பொருத்தம் பார்த்தாலும்,பார்க்காவிட்டாலும், காதல் திருமணமாக இருந்தாலும், நிச்கயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் யார் யாருடன் சேர வேண்டுமோ அந்த ஜாதகங்கள் தான் இணைகின்றன.
கர்மாவின் படிதான் வாழ்க்கை நகர்கிறது என்பது தான் நிதர்சனம்.



Monday, October 30, 2017

ஜோதிட நுணுக்கங்கள் - ஏழாம் பாவம்



லக்னத்திற்கு சமமாக ஏழாம் பாவத்தை தொடாமல், ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடியாது.என்னதான் , நட்சத்திர பொருத்தம், ராசி, லக்ன பொருத்தம் இருந்து , திருமணம் நடந்தாலும், இருவர் ஜாதகத்திலுமோ அல்லது ஒருவர் ஜாதகத்தில் மட்டுமோ, மறுமணம் நடக்க வேண்டும் என்று இருந்தால், கண்டிப்பாக நடந்தே தீரும்.7,11 அதிபதிகள் எவ்விதத்திலாவது அன்னியோனியமாக இருந்தால், இரண்டாம் திருமணம் நிச்சயம் நடந்தே தீரும்.
11 ஆம் அதிபதி வலிமை அடைந்து இருந்து அவன் தசை நடை பெற்றாலும், இரண்டாம் திருமணம் நடந்தேறும்.7 இல் குரு இருந்தால் இளைய மனைவி மூலம் குழந்தை பெறுவதை குறிக்கும்.
துறவறம் போவதற்கு 7 ஆம் இடம் கேட்டு இருக்க வேண்டும். அதில், 5,9 ஆம் இடங்கள் பலம் பெற்று இருந்தால், நல்ல சாமியார், அதுவும் கெட்டு இருந்தால் போலி சாமியார். இதில் கேதுவின் நிலையையும் ஆராய வேண்டியது அவசியம்.7 ஆம் வீடு அல்லது 2 ஆம் வீடு இவற்றுக்கு கேது சம்பந்தம், ஏழாம் அதிபதி பகை , நீசம் பெறுவது, இந்த அமைப்புகளெல்லாம், துறவரத்தை குறிக்கும். ராகு, கேதுக்களுக்கென்று தனி வீடுகள் இல்லை. ராகு கும்ப சனியை போலவும், கேது, விருச்சிக செவ்வாய் போலவும் பலன் கொடுக்கும். இதில், சம்பந்தப் பட்ட ஜாதகருக்கு, கும்பமும், விருச்சிகமும் எந்த பாவமாக வருகிறதென்றும், சனி மற்றும் செவ்வாயின் நிலையை ஆராய்ந்தும் , ராகு , கேதுவின் பலத்தை கணக்கிட வேண்டும்.
சந்திரனுடன் ராகு, கேது இருப்பது, எப்படியும் தவறாகும். கேது மனதை நோகடிப்பார். ராகு, வீரியத்துடன், தவறுகளை செய்யத் தூண்டுவார். சந்திரன், ராகு, கேதுக்களுக்கு, குறைந்தது 12 பாகை முன்போ அல்லது பின்போ தள்ளி இருந்தால், பாதிப்பு இல்லை. எனினும், ஒரு பாவத்தில், இவை சேர்ந்து இருப்பது தவறுதான். மிகச்சிறிய அளவிலாவது, அது வெளிப்படும்.

ஒரு ஸ்தானத்தின் பலனை ஆராயும் போது , ஸ்தான அதிபதி இருக்கும் வீடு, ஸ்தானாதிபதி ஏறிய நட்சத்திரம், ஸ்தானத்தை பார்க்கும் கிரகங்கள், ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்கள் இவற்றை அனுசரித்து பலன் சொல்ல வேண்டும். இவற்றுள் முதன்மையானதாக, ஸ்தானாதிபதி இருக்கும் இடத்தையொட்டியே பலன்கள் இருக்கும். மற்ற அம்சங்கள், நன்மை அல்லது தீமையை கூட்டவோ, குறைக்கவோ உதவும் அவ்வளவுதான்.

ஒரு ஸ்தானத்தின் பலனை ஆராயும் போது, அந்த ஸ்தானாதிபதி லக்னத்திற்கு சுப ஸ்தானங்களில் நட்பு ரீதியில் இருந்தால் நன்மைகள் நடக்கும். பகை, நீசம் அஸ்தமனம், கெட்ட பாவங்களில் இருந்தால் தீமைகள் நடக்கும். மறைவு ஸ்தானங்களில் இருந்தால், வினைப்பயனை அனுபவிக்கும் நிலை உண்டாகும். இது எந்த பரிகாரத்திற்கும் கட்டுப்படாது.

Saturday, October 28, 2017



சந்திராஷ்டமம் குறித்த அனுபவ விளக்கம்


ஜென்ம ராசிக்கு எட்டாம் ராசியில் கோட்சாரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் இரண்டேகால் நாட்களை சந்திராஷ்டமம் என்கிறோம். இந்த நாட்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கிய பணிகள் தவிர்த்து மற்ற பணிகளில் ஈடுபாடு கூடாது. திடீர் பயணங்கள் செய்யக்கூடாது.குறிப்பாக பேச்சில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் அனுபவத்தில் எல்லோருக்கும் ஒரே மாதிரி விளைவுகள் சந்திராஷ்டமத்தினால் ஏற்படுவதில்லை. ஜென்ம ராசிக்கு எட்டாம் ராசியில் இருக்கும் பிறந்த நட்சத்திரத்திலிருந்து எண்ண வரும் 16,17 மற்றும் 18வது நட்சத்திரங்கள் இந்த சந்திராஷ்டம காலத்தில் அடங்கும். தாரா பலன் அடிப்படையில் இந்த 16வது நட்சத்திரம் வதைத் தாரையிலும், 17வது நட்சத்திரம் மைத்திரம் 18வது நட்சத்திரம் பரம மைத்திரம் என்கிற வகையிலும் விழுகின்றன. இதில் வதை என்பது துன்பத்தையும் மைத்திரம் என்பவை நட்பையும் குறிக்கும். எட்டாம் ராசியில் விழும் இந்த 16வது வதை நட்சத்திரம் சிலருக்கு கால் பாகமும், சிலருக்கு அரை, சிலருக்கு முக்கால் மற்றும் சிலருக்கு முழு நட்சத்திரமாக அமையும். ஒரு நட்சத்திரத்தின் அளவு தோராயமாக 24 மணி நேரம் என்று எடுத்துக் கொண்டால், அதில் சிலருக்கு 6 மணி நேரம், சிலருக்கு சிலருக்கு அரைநாள், சிலருக்கு முக்கால் நாள் மற்றும் சிலருக்கு முழு நாள் இருக்கும். இங்கே நாள் என்று சொல்லப்படுவது குறிப்பிட்ட 16வது நட்சத்திரத்தின் ஆரம்ப நேரம் முதல் முடியும் நேரம் வரை. இந்த சந்திராஷ்டமம் என்பது இந்த 16வது நட்சத்திரம் 8ஆம் ராசியிலிருக்கும் காலம் வரை, சிற்சில தடைகள், அதன் மூலம் சிறு மன உளைச்சல், செய்யும் வேளைகளில் சிறிது தாமதம் ஆகியவை மட்டுமே ஏற்படும். மற்ற இரண்டு நட்சத்திரங்கள் சுப தாரையில் வருவதால் மற்றபடி வேறு எந்த பிரச்சினைகளும் ஏற்படுவதில்லை. திடீர் பிரயாணங்களை மட்டும் தவிர்த்தால் போதுமானது. ஆனால் எல்லோருக்கும் இப்படியல்ல. யாருக்கெல்லாம் ஜாதகத்தில் சந்திரன் நீசமாகவும், பகை வீடுகளிலும், ஆட்சி உச்சம் தவிர்த்த மறைவு ஸ்தானங்களிலும் இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டும் சற்று கூடுதலான அலைச்சல்கள், மன உளைச்சல்கள் உண்டாகும். குறிப்பாக பேச்சினால் வம்பு வரலாம். இவை அனைத்தும் அந்த குறிப்பிட்ட கால அளவுகளில் மட்டுமே ஏற்படும்.
இன்று காலை ஒரு முக்கிய பணிக்காக செல்ல வேண்டி இருந்ததால், நேரமாக அலுவலகம் சென்றுவிட்டு அந்த பணிக்கு செல்லலாம் என்று திட்டமிட்டு கிளம்பினால், சற்று தூரத்தில் ஒரு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் காரணமாக சாலையில் தடை. திரும்பிப் போனால் ரொம்பவும் சுத்து.... எனவே சந்துகளில் நுழைந்து, அவை சிறியதாக இருந்ததால் ஏகப்பட்ட ட்ராஃபிக். டேக் டைவெர்ஷன் , டேக் டைவெர்ஷன் என சிறிய தடை. சிறிது கால தாமதம். இவற்றைத் தாண்டி சந்திராஷ்டமம் குறித்த எந்த வித அச்சமும் தேவையில்லை.
குறிப்பிட்ட அந்த பணி எந்த தொய்வும் இல்லாமல் நல்லபடியாக முடிந்தது. எனக்கு சந்திரன் நான்காம் வீட்டில் திக் பலம் பெற்றதும் ஓர் காரணம்.
எனவே சந்திராஷ்டமம் குறித்த தேவையற்ற அச்சத்தைப் போக்கவே இந்த அனுபவ பதிவு.

யார் மக்கள்  பலம் உடையவர்?

மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் பதவிக்கு வருபவர்களுக்கு சனியின் பலத்தைத் தான் பார்க்க வேண்டும். நியமனம் மூலம் அரசியல் பதவிக்கு வருவோர்க்கு சூரியனின் பலத்தை பார்க்கலாம்... உதாரணத்திற்கு கலைஞர், ஜெயலலிதா சனியின் பலம்.... ஓ‌பி‌எஸ் மற்றும் இ‌பி‌எஸ் சூரியனின் பலம்.


மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள் யார்?


புதனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த பணியாளர்கள். எஜமான விசுவாசம் உடையவர்கள். இதில் ஆயில்யத்தில் பிறந்தவர்கள் மற்ற இரு நட்சத்திரங்களில் பிறந்தவர்களை விட மிகுந்த நம்பிக்கைக்குரியவர்கள். நிறைய பினாமிகள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருக்கக் கூடும் என்பது எனது அனுமானம். எஜமானர் ஏதேனும் பிரச்சினைக் செய்தால் திரும்பி நின்று மூர்க்கமாக எதிர்க்கவும் தயங்க மாட்டார்கள். இதே நிலையில் கேட்டையில் பிறந்தவர்கள் தம் எஜமானரை விதூஷகம்(நக்கல்) செய்து நகையாடுவார்கள். இதுவே ரேவதியில் பிறந்தவர்கள், கமுக்கமாக வியாபாரம் செய்து கமிஷன் பார்த்து விடுவார்கள். இவை மூன்றும் எஜமானர் இவர்களுக்கு துன்பம் கொடுத்தால் மட்டுமே. இயல்பில் மூவரும் விசுவாசமாக இருப்பார்கள்.
யார் ஒருவருக்கொருவர் எதிர்க்கருத்து கொண்டிருப்பார்கள்?

லக்னம் அல்லது ராசிக்கு 7 ஆம் இடம் மற்றும் அதற்கு திரிகோண ராசிகளைச் சேர்ந்தவர்கள் மேற்படி லக்னம் ,ராசிக் காரர்களுக்கு எதிர்க் கருத்து கொண்டிருப்பார்கள். உதாரணத்திற்கு, கன்னி லக்னம்/ராசியின் 7 ஆம் இடம் மீனம், அதற்கு திரிகோண ராசிகள் கடகம் மற்றும் விருச்சிகம் . மேற்படி கன்னி லக்னம்/ராசிக்காரர்களுக்கு, மீனம், கடகம் மற்றும் விருச்சிகம் லக்ன/ராசிக்காரர்கள் எதிர்க் கருத்து உடையோராக இருப்பார்கள்!


செவ்வாயும் சனியும் பரஸ்பரம் பார்வை செய்து கொண்டு 8 ஆம் இடத்தோடு தொடர்பு கொள்ளும்போது, அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைய நேரிடும்.
இதற்கு அனுபவ பரிகாரம்:சீரான இடைவெளியில் இரத்த தானம் செய்வது.

யார் நிமித்தங்களை கவனிக்க வேண்டும்?


கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம் மற்றும் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அவர்கள் முடிவு எடுக்க வேண்டிய விஷயங்கள், செயல்பட வேண்டிய முறைகள் போன்றவற்றிற்கு நிமித்தம் மூலம் வழிகாட்டல் செய்திகள் கிடைக்கும். உதாரணத்திற்கு ஒரு முக்கிய பணிக்காக செல்ல வேண்டி போகலாமா வேண்டாமா என்று யோசிக்கும் நிலையில்,. கிளம்பிப் போ... நல்ல செய்தி கிடைக்கும் என்பது போல தெருவில் இருவர் அவர்களுக்குள்ளாக பேசிக்கொண்டு செல்லலாம்.... அது உங்களுக்கான செய்தி... மேற்படி நட்சத்திரங்களில் உதித்தவர்களுக்கு எப்பொழுதும் சுற்று புறத்திலிருந்தே தேவையான செய்திகள் கிடைத்துக் கொண்டிருக்கும் என்பதால் இனி அக்கம் பக்கம் கவனியுங்கள்.

இந்திய அரசு வானிலை ஆராய்ச்சி மையத்தின் கீழ் இயங்கும் மெட்டீரியாலஜி டிபார்ட்மெண்ட் மூலம், சித்ர பட்ச அயனாம்ஸம் படி ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் ராஷ்ட்ரீய பஞ்சாங்கம் என்கிற பெயரில் அரசால் பஞ்சாங்கம் வெளியிடப்படுகிறது.... கீழ்கண்ட வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் போட்டு வைத்துக் கொள்ளலாம். தேவைப் படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.
http://www.packolkata.gov.in/others.php



ஜென்ம,அனுஜென்ம,பிரதிஜென்ம நட்சத்திரங்கள் 


ஜென்ம நட்சத்திரக் குழுவில் இருக்கும் 10ஆம் நட்சத்திரம் மற்றும் 19ஆம் நட்சத்திரத்தினர் இடையே ஒரு இயற்கையாகவே ஒரு ஆத்மார்த்தமான ஒட்டுதல் ஏற்படுகிறது.... குறிப்பாக ஜென்ம நட்சத்திரத்திற்கும் 19ஆம் நட்சத்திரத்திற்கும் புரிதல் சற்று கூடுதலாகவே இருக்கிறது... பரிசோதித்துப் பாருங்கள்... உதாரணத்திற்கு அசுவினியில் பிறந்த ஒரு ஜாதகருக்கும் அதே குழுவில் உள்ள 19ஆவது நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஒரு ஜாதகருக்கும் இயற்கையாகவே ஒரு புரிதல் இருக்கும். இதை நட்பு, குரு மற்றும் தொழில் சார்ந்த வகைகளில் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். புரிதல் என்று சொல்லுவதால் Marital Relationship ஆக பொருத்திப்பார்க்கக் கூடாது.


குறிப்பிடும் அளவிற்கு, சஷ்டாஷ்டக ராசிகளுக்கிடையிலோ, ரச்சு தட்டும் நட்சத்திரங்களுக்கிடையிலோ ஆண்கள் பெண்களிடையே ஈர்ப்பு உண்டாகிறது... அனுபவத்தில் நிறைய பேரைக் காணமுடிகிறது...









21.09.2017, பகல் 12.31க்கு வான மண்டலத்தில் கிரகங்களின் நிலை... 
வான மண்டலத்தில் இந்த நேர கிரக நிலைகள்(Planetary Positions)... செவ்வாய், புதன் சுக்கிரன் சேர்க்கை.... உத்திரத்திலிருக்கும் சூரியனைத் தாண்டி குருவை நெருங்கும் சந்திரன்.... குருவை அடுத்து இருக்கும் சனி. சேலம் lattitude மற்றும் longitude லிருந்து எடுக்கப்பட்ட படம்....



சந்திரன் வலுப்பெற்று, சுபாம்சம் பெற்ற ராகுவுடன் நெருக்கமாக இல்லாமல் ஒரு வீட்டில் இணைந்திருந்தால், அடிக்கடி புத்திக்கும், மனதுக்கும் போராட்டம் நிகழ்ந்தவாறு இருக்கும்... புத்தியும் மனமும் மாறி மாறி ஜெயிக்கும்... தொடர்ந்து மனமே ஜெயித்தால் ராகுவின் ஆதிக்கம் அதிகமுள்ளதென அறிக!
பலவிதமான ஜோதிட மென்பொருள்கள் வந்து கொண்டிருப்பதால் தற்காலத்தில் ஜோதிட ஆர்வலர்களிடம் கணிதம் செய்வதை கற்றுக் கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறது. அடிப்படை கணிதம் செய்யத் தெரியாமல் மென்பொருளை பயன்படுத்தி பலன்களை மட்டும் சொல்வதற்கு கற்பது கோவணத்தை அணிந்து கொண்டு பட்டுச் சட்டை உடுத்துவது போலாகும். பேஸ்மென்ட் இல்லாத கட்டடம் போன்றதாகும். எனவே ஜோதிடம் பயில விரும்புவோர், யாரையேனும் குருவாக ஏற்று முறையாக கணிதத்தை டிகிரி சுத்தமாக செய்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். பல்வேறு அயனாம்ஸம்ஸங்கள் நடைமுறையில் இருந்தாலும் திருக்கணிதத்தில் லஹரி அயனாம்ஸம் பெரும்பாலானவர்களால் பின்பற்றப் படுகிறது. நானும் இதையே பின்பற்றுகிறேன். லஹரியின் Table of Ascendants மற்றும் லஹரி Ephemeris போன்ற புத்தகங்களை வைத்து பஞ்சாங்கம் இல்லாமலே துல்லியமாக கணிதம் செய்யலாம். அந்த கணிதம் 100 சதவீதம் jagannath Hora மென்பொருளோடு சரியாக இருக்கிறது. இதே கணிதத்தை பஞ்சாங்கம் மூலமாக செய்ய சேலம் ஸ்ரீநிவாசன் திருக்கணித பஞ்சாங்கம் துல்லியமாக இருக்கிறது. தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளவும்.
பெண் நட்புகள் யாருக்கு அதிகமாக இருக்கும்?

ஜாதகத்தில் செவ்வாய்-சுக்கிரன் , சந்திரன்- சுக்கிரன் சேர்க்கை, பரிவர்த்தனை, பரஸ்பரம் தத்தமது நட்சத்திரங்களில் மாறி நிற்பது, ஒருவருக்கொருவர் முன் அல்லது பின் ராசியில் 13 பாகை இடைவெளிக்குள் இருப்பது போன்ற அமைப்பு இருந்தால், எதிர் பாலின நட்புகள் அதிகம் இருக்கும். உதாரணத்திற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதகத்தில், கடகத்திற்குரிய சந்திரன் ரிஷபத்திலும், ரிஷபத்திற்குரிய சுக்கிரன் கடகத்திலும் பரிவர்த்தனை ஆனாதால் கோபியர் கொஞ்சும் ரமணன் ஆனார்...
குருசந்திர யோகம்



குருவிற்கு திரிகோணத்தில் சந்திரன் இருக்கப் பிறந்த குழந்தையை தெய்வம் பார்த்துக்கொள்ளும். ஆரோக்கிய ரீதியில் குரு சந்திரன் சேர்க்கை சளியை உண்டு பண்ணும். சிலருக்கு சிறிது நெடியடித்தாலே தும்மல், அதைத் தொடர்ந்து சளி வெளியேறும். மருத்துவத்தில் இந்த நிலையை உடலில் ஏற்படும் அதிகப்படியான எதிர்ப்பு சக்தியின் வெளிப்பாடு என்கிறார்கள். முதல் வரியில் சொல்லப் பட்டது மருத்துவ ரீதியில் நிரூபணமாகிறது.
திரிம்சாம்சம்

முதுமையில் ஏன் பெண் பலமானவளாகவும்,ஆண் பலம் குறைந்தவனாகவும் மாறுகிறார்கள்? --- காரணம் திரிம்சாம்சம் என்னும் ஜோதிட சூட்சுமம்  

ஆண் ராசியில் 5,5,8,7, 5 பாகைகளில் முறையே செவ்வாய் , சனி, குரு , புதன் , சுக்கிரன் என்ற அமைப்பிலும், அதுவே பெண் ராசிகளில் 5,7,8,5,5 பாகைகளில் முறையே சுக்கிரன்,புதன், குரு , சனி, செவ்வாய்.என்ற அமைப்பிலும் இருக்கும்.. இங்கே ஆண் ராசி, பெண் ராசி என்பது ஆண்கள், பெண்கள் உடைய ராசிகள் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது...
மேஷம் ஆண் ராசி , ரிஷபம் பெண் ராசி .. இப்படியே மாறி மாறி வரும். ஒருவருடைய குணாதிசயத்தை நுட்பமாக அறிய அவருடைய லக்னம் எந்த கிரகத்தின் திரிம்சாம்த்தில் வருகிறது என்று பார்த்தால் தெரியும்.... இதன் மூலம் ஆண் பெண் வாழ்க்கை முறையை மறைமுகமாக நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். நன்றாக கவனியுங்கள் ஆண் ராசியில் முதலில் ஆரம்பிப்பது செவ்வாய் திரிசாம்சம்.. அதாவது, கோபம் முரட்டுத்தனம் . முடிவது சுக்கிரன் ,பெண்மைத் தன்மை.... அதாவது முரட்டுத்தனத்துடன் ஆண்மகனாக வாழ்வைத் துவங்கும் ஆண் முடிவில் பெண்மைத் தன்மை அடைந்துவிடுகிறான்..... இதையே பெண் ராசியில் பார்த்தோமானால் , ஆரம்பம் சுக்கிரன் , பெண்மைத் தன்மை... முடிவு செவ்வாய்.... ஆண்மைத் தன்மை... நிரவாகத் திறனையும் குறிப்பிடும்... சுகமானப் பெண்ணாக வாழ்வைத் துவங்கும் பெண் முடிவில் ஆண் தன்மை   அடைந்து விடுகிறாள்... எனவேதான் ஒரு ஆண் தனது அந்திம காலத்தில் பெண்துணை இல்லையென்றால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறான்... அதே ஒரு பெண் தனது அந்திம காலத்தில் தனியாகவே வாழ்ந்தாலும் மிகுந்த தெளிவுடனும், நிர்வாகத் திறனுடனும் இருக்கிறாள்.... இது தான் இந்த திரிம்சாம்சத்தின் தத்துவம்...


இது போல ஒருவர் பிறந்த கரணமே அவரது செயல்பாட்டு முறையைத் தெரிவிக்கும்!

Wednesday, October 25, 2017

திருக்கணிதப்படி இன்று26.10.2017) சனி பகவான் விருச்சிகத்திலிருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்... கும்பம்,கடகம் மற்றும் துலா ராசிகளுக்கு நன்மைகள்... அதிலும் கும்பத்திற்கு கூடுதல் நன்மைகள் உண்டாகும். ரிஷபத்திற்கு அஷ்டம சனி, மிதுனத்திற்கு கண்டச் சனி, கன்னிக்கு அர்த்தாஷ்டம சனி. மகரத்திற்கு ஏழரைச் சனி ஆரம்பம். மகரத்திற்கு மட்டும் விரையங்கள் கூடும்... கூடச் சென்ற தோஷத்திற்குக் கூட மற்றவருக்காக விரையங்களை சந்திக்கலாம். இந்த ராசி ஒன்றை தவிர்த்து சனி குருவின் வீட்டில் இடம் பெயர்வதால் மற்ற ராசிகளுக்கு பொதுவாக பெரிதாக எந்த கெடுதலும் இருக்காது என்பது எனது கணிப்பு.

Wednesday, October 18, 2017



திதி சூன்யம்



ஜோதிட சாஸ்திரத்தில் திதிகள் குறித்து தெரிவிக்கப்படும் பலன்கள் பலவாறாக இருப்பினும் திதி தரும் தாக்கம் அதாவது முதன்மையாக கருதப்படவேண்டிய அம்சம் திதி சூன்யம் ஆகும். அதாவது திதி அன்று ராசிகள் அடையும் சூன்ய தன்மை. ஒவ்வொரு திதியும் குறைந்தது இரண்டு ராசிகளை சூன்யம் அடையச் செய்கிறது. சூன்யம் என்பது எரியும் தன்மையுடையது அல்லது பூஜ்யம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இதில் அமாவாசையும் பௌர்ணமியும் அடங்காது. மற்ற திதிகள் சூன்யம் செய்யும்.அவை பின்வருமாறு.

திதி
சூன்யம் பெரும் ராசிகள்
பிரதமை
துலாம்,மகரம்
துதியை
தனுசு , மீனம்
திருதியை
மகரம்,சிம்மம்
சதுர்த்தி
கும்பம்,ரிஷபம்
பஞ்சமி
மிதுனம்,கன்னி
சஷ்டி
மேஷம்,சிம்மம்
சப்தமி
தனுசு,கடகம்
அஷ்டமி
மிதுனம்,கன்னி
நவமி,தசமி
சிம்மம்,விருச்சிகம்
ஏகாதசி
தனுசு,மீனம்
துவாதசி
துலாம்,மகரம்
திரயோதசி
ரிஷபம்,சிம்மம்
சதுர்த்தசி
மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்,

திதி சூன்யம் பெறும் ராசிகள், அவைகளின் அதிபதிகள், அந்த ராசிகளில் உள்ள கிரகங்கள் தங்களின் பலத்தை இழக்கிறார்கள்.ஆனால் வக்கிரம் பெறும் கிரகம் தன்னுடைய பலத்தை இழப்பதில்லை. ஜாதக பலன்களைச் சொல்லும் போது இந்த திதி சூன்ய ராசிகளையும் அனுசரித்தே பலனறிய வேண்டும்.


Saturday, October 7, 2017

|| Shri Ganeshaya Nama ||



ஜாதகத்தில் பிறப்புயோகியின் முக்கியத்துவம்


27 நட்சத்திரங்களையொட்டி 27 யோகங்கள் இருக்கின்றன. பூசம் நட்சத்திரம் ஆரம்பமாகும் புள்ளி 93 பாகை 20 கலை ஆகும். இந்தப் புள்ளியிலிருந்து முதல் யோகமான விஷ்கம்பம் தொடங்கி வரிசைக் கிரமமாக 27 யோகங்கள் இருக்கின்றன. இவற்றின் அளவும் நட்சத்திரங்கள் போலவே 13 பாகை 20 கலை என்பதால் ஒவ்வொரு யோகத்தின் அதிபதியாக அது விழும் புள்ளியிலிருக்கும் நட்சத்திரத்தின் அதிபதி அமைவார். அவரே பிறப்பு யோகி எனப்படுவார். அந்த நட்சத்திரம் விழும் வீட்டின் அதிபதி பிரதியோகி எனப்படுவார். அதாவது அவரும் நன்மை செய்வார். பிறப்பு யோகியின் நட்சத்திரத்திலிருந்து எண்ணி வரும் 6ஆவது நட்சத்திரத்தின் அதிபதி அவயோகி எனப்படுவார்.
மனித வாழ்வை நிர்ணயம் செய்வதில் இந்த யோகங்களுக்கு முக்கியமான இடமுண்டு. குறிப்பாக நோய்கள் நிவாரணத்திற்கு இந்த யோகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
இனி யோகங்களை எப்படி கணக்கிடுவதென்று பார்ப்போம்.
சூரியனின் ஸ்புடத்தையும் சந்திரனின் ஸ்புடத்தையும் கூட்டி வருகின்ற தொகையுடன். முதல் யோகமான விஷ்கம்பத்தின் ஆரம்பப் புள்ளியான பூசம் நட்சத்திரம் ஆரம்பமாகும் 93 பாகை 20 கலைகளை கூட்டி வருகின்ற ஸ்புடம் தான் யோகத்தின் ஸ்புடமாகும்.
உதாரணம்.
20.9.2015 அன்று காலை 5.30 மணிக்கு சூரியனின் ஸ்புடம் 152 பாகை 40 கலை , சந்திரனின் ஸ்புடம் 226 பாகை 29 கலை. இவை இரண்டையும் கூட்ட
152 40 + 226 29 = 379 09 இத்துடன் முதல் யோகத்தின் ஆரம்பப் புள்ளியான பூசம் நட்சத்திரம் தொடங்கும் 93 பாகை 20 கலைகளை கூட்ட
379 09 + 93 20 = 472 29 ஆகும். ஒரு ராசி வட்டம் என்பது 360 பாகைகள். இது 360 பாகைகளுக்கு மேலுள்ளத்தால் இதிலிருந்து 360ஐ கழிக்க 472 29-360 00 = 112 29 ஆகும்.
இந்த 112 பாகை 29 கலையில் மேஷம் தொடங்கி 3 ராசிகளுக்குரிய 90 பாகைகளைக் கழித்தால் மீதி 22 பாகை 29 கலை வரும். இந்த பாகையில் விழும் நட்சத்திரம் ஆயில்யமாகும். இந்த நட்சத்திற்குரிய பிரீதி யோகத்தில் இந்த நேரம் அமைந்துள்ளது..
ஜனன யோகிக்கு  4ஆவது யோகியும், 7வது யோகியும் ஒரே குழுவில் இருப்பார்கள். ஒரே குழுவில் இருக்கும் கிரகங்கள் எந்தவிதத்திலும் யோகத்தை கூட்டியே கொடுப்பார்கள். உதாரணமாக தற்போது கணக்கிட்ட பிரீதியோகம் ஆயில்யத்தில் விழுவதால் அந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன்.ஆயியத்தின் 4ஆம் நட்சத்திரம் உத்திரம். அது போலவே ஆயில்யத்தின் 7ஆம் நட்சத்திரம் சுவாதி. அதன் அதிபதி ராகு. சூரியன் ,புதன் மற்றும் ராகு ஆகிய மூவரும் ஒரே குழுவில் இருப்பதால் இவர்கள் இந்த ஜாதகருக்கு நன்மையையே செய்யக் கடமைப்பட்டவர்களாவர்.
இதைப்போலவே யோகம் அமையும் நட்சத்திரத்திற்கு 6ஆவது நட்சத்திரம், அதனுடைய யோகத்தின் அதிபதி அவயோகி என்று பெயர் பெற்று தீமை செய்வதில் முன்னிலையில் இருப்பார்.
உதாரணம் பிரீதி யோகத்திற்கு 6ஆவது யோகம் சுகர்ம யோகமாகும். இது விழும் சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் அவயோகி ஆவார். இதை எளிமையாக புரிந்து கொள்ள யோகம் அமையும் நட்சத்திரத்தில் இருந்து வரும் 6வது நட்சத்திரத்தின் அதிபதி அவயோகி என்று நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
அடுத்து, இந்த பிரீதி யோகம் அமையும் நட்சத்திரமான ஆயில்யம் கடக ராசியில் விழுவதால் அதன் அதிபதி சந்திரன் பிரதியோகி என்று அழைக்கப்படுவார். பிரதியோகி என்பவர் யோகத்தைக் கொடுக்கும் கிரகத்தைச் சார்ந்து அதனை பரிசீலித்து யோகத்தைத் தருவதால் பிரதியோகி என்று அழைக்கப்படுகிறார். யோகங்களின் பட்டியலைக் காண்போம்.


யோகங்கள்
நட்சத்திரங்கள்
யோகி
விஷகம்பம்--கண்டம்--பரிகம்
பூசம்-அனுசம்-உத்திரட்டாதி
சனி
பிரீதி—விருத்தி-சிவம்
ஆயில்யம்-கேட்டை-ரேவதி
புதன்
ஆயுஷ்மான்-துருவம்-சித்தம்
மகம்-மூலம்-அசுவினி
கேது
சௌபாக்யம்--வியாகதம்—சாத்யம்
பூரம்-பூராடம்-பரணி
சுக்கிரன்
சோபனம்—ஹர்ஷனம்-சுபம்
உத்திரம்-உத்திராடம்-கிருத்திகை
சூரியன்
அதிகண்டம்—வஜ்ரம்-சுக்லம்
ஹஸ்தம்—திருவோணம்—ரோகிணி 
சந்திரன்
சுகர்மம்-சித்தி-பிரம்மம்
சித்திரை-அவிட்டம்-மிருகசீரிடம்
செவ்வாய்
திருதி—வியதீபாதம்—இந்திரம்
சுவாதி-சதயம்-திருவாதிரை
ராகு
சூலம்—வரீயான்—வைத்ருதி
விசாகம்—பூரட்டாதி—புனர்பூசம்
குரு


நல்லியல்புடைய ராசி இருப்பது போல எதிர் இயல்புள்ள ராசி இருக்கிறது இயல்பு.அதைப்போல, நல்ல இயல்புடைய யோகி இருப்பதைப்போல அதற்கு எதிர் இயல்புடைய யோகி இருப்பார். அவர்  அவயோகி என அழைக்கப்படுவார்.அதாவது யோகத்தை எதிர்மறையாக மாற்றக் கூடியவர் என்று பொருளாகும்.
யோகமும் அவயோகமும்.
வரிசை
யோகி
அவயோகி
1
சூரியன்
சனி
2
சந்திரன்
புதன்
3
செவ்வாய்
கேது
4
புதன்
செவ்வாய்
5
குரு
சூரியன்
6
சுக்கிரன்
குரு
7
சனி
சந்திரன்
8
ராகு
சுக்கிரன்
9
கேது
ராகு

மேற்கண்ட முறையில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு எதிர்மறையான கிரகம் இருப்பதை அறியலாம். மேலும் 9 கிரகங்களும் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு.

      1.கேது,சந்திரன்,குரு
      2.சுக்கிரன்,செவ்வாய்,சனி
      3.சூரியன்,ராகு,புதன்

பலன்கள் அடிப்படையில் ஒரு குழுவில் உள்ள 3 கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்புடைய கிரகங்களாகும். அதாவது ஒரு குழுவில் உள்ள கிரகம் பிறப்பு யோகி அந்தஸ்து பெற்றால் அக்குழுவில் உள்ள மற்ற இரு கிரகங்களும் பிறப்பு யோகி தரும் நற்பலன்களுக்கு இணையாகவோ அல்லது உதவியாகவோ இருக்கும் என்பதே இக்குழுவின் செயல்பாடுகள். அதாவது யோகி தரும் பலன்களை இயற்கையாகவே மற்ற இரு கிரகங்களும் உட்கொள்ள வேண்டும் என்பதே பொருள்.
இதில் முழுமையான ஈடுபாடு ராகு கிரகத்திற்கு உண்டு என்பது அனுபவ பூர்வமான உண்மையாகும். ஒருவருக்கு சூரியனோ, புதனோ பிறப்பு யோகியாக இருந்தால் ராகு அவர்களுக்கு இணையான நற்பலன்களைச் செய்வார்.

அதே போல சூரியன் பிறப்புயோகியாக இருக்கும் போது தன்னுடன் சேர்ந்து அஸ்தமனமாகும் கிரங்களின் பலன்களை தானே நல்லவிதமாக செயல்படுத்துவார்



மனைவியின் ராசியை கண்டறியும் சூட்சுமம். ஒருவர் தனக்கு வரப்போகும் மனைவியின் ராசியை எளிதாக அறிந்துகொள்ள ஜோதிடத்தில் பல சூட்சுமங்கள்...